ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு தப்பியது
- சிவசேனா கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின.
- சிவசேனா கட்சி, சின்னம் மற்றும் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென அவரது அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்தனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்து வந்த மெகா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தனர். இதனால் பா.ஜனதா-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் புதிய ஆட்சி அமைந்தது.
ஏக்நாத்ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், சிவசேனா கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின. இது தொடர்பாகவும், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் இரு பிரிவினர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சிவசேனாவின் வில்-அம்பு சின்னத்தை பயன்படுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை தொடர்ந்து விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி முதல் 9 நாட்கள் விசாரணை நடந்தது. இரு பிரிவினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 16-ந் தேதி அறிவித்தது.
இந்தநிலையில் சிவசேனா கட்சி, சின்னம் மற்றும் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
மேலும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்து உரிய நேரத்திற்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பியது.