தேர்தல் பத்திரங்கள் விவகாரம் - நேரம் வரும் போது எல்லாத்தையும் சொல்லுவோம் - தேர்தல் ஆணையர்
- விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
- ஜனநாயக திருவிழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்து இருக்கிறார்.
2019 ஏப்ரல் 12-ம் தேதி முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க உச்சநீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கு அனுமதி பெற்ற ஒற்றை நிறுவனமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.
"மார்ச் 12-ம் தேதியன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர்கள் சரியான நேரத்தில் விவரங்களை வழங்கியுள்ளனர். நாங்கள் அதில் உள்ள விவரங்களை முழுமையாக பார்த்துவிட்டு, நேரம்வரும் போது அதுபற்றிய தகவல்களை தெரிவிப்போம்," என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "2024 பாராளுமன்ற தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவோம். ஜனநாயக திருவிழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறோம்," என்று தெரிவித்தார்.