திருப்பதி அருகே கிணற்றில் விழுந்த யானை தண்ணீரில் தத்தளிப்பு
- விளைநிலத்திற்குள் புகுந்த யானை ஒன்று அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்தது.
- யானையால் வெளியே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தப்படி பிளிறியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் மொகிலி ஊராட்சிக்குட்பட்ட காண்டப்பள்ளியில் உள்ள விவசாய நிலங்களில் நள்ளிரவில் யானை கூட்டம் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது.
நேற்று இரவு விளைநிலத்திற்குள் புகுந்த யானை ஒன்று அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்தது.
யானையால் வெளியே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தப்படி பிளிறியது. யானையின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் யானை கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றிலிருந்து யானை வெளியேறி வருவதற்காக நிலத்தை வெட்டி சமன் செய்தனர்.
இதையடுத்து யானை கிணற்றிலிருந்து மேலே வந்தது. யானையை மீட்ட வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று அதனை விட்டனர்.