விமர்சனத்துக்குள்ளான மதுக்கடை சுவரொட்டி
- குடிமகன்கள் போதையில் இருக்கும்போது ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
- சுவரொட்டியை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள ஒரு மதுபான கடை அருகே ஒட்டப்பட்ட சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
அந்த சுவரொட்டியில் மதுக்கடையை நோக்கி ஒரு அம்புகுறியுடன், கடைக்கு சென்று சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. குடிமகன்கள் போதையில் இருக்கும்போது ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
இந்நிலையில், மதுபான கடைக்கு வாடிக்கையாளர்களை கவரும் உத்தியாக இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற போஸ்டர்கள் அப்பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சிலர் கண்டித்துள்ளனர்.
இந்த போஸ்டர் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக இந்த சுவரொட்டியை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.