இந்தியா

பிரதமர் மோடியால் கூட என்னை அரசியலில் வீழ்த்த முடியாது: பங்கஜா முண்டே பேச்சால் பரபரப்பு

Published On 2022-09-29 04:10 GMT   |   Update On 2022-09-29 04:10 GMT
  • பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட விரும்புகிறார்.
  • பங்கஜா முண்டே கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

மும்பை :

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், மராட்டிய முன்னாள் மந்திரியுமான பங்கஜா முண்டே கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாகவும், அவர் கட்சி மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே பேசியது, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட விரும்புகிறார். நானும் குடும்ப அரசியலின் அடையாளம் தான். ஆனால் உங்கள்(மக்கள்) இதயங்களில் நான் ஆட்சி செய்வதால், பிரதமர் நரேந்திர மோடி கூட என்னை வீழ்த்த முடியாது" என்றார்.

முண்டேவின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்து தனது பேச்சு குறித்து பங்கஜா முண்டே வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக எனது உரை இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது.

பரபரப்பான செய்திகளுக்கு மத்தியில் நேரமிருந்தால் நீங்கள் முழு வீடியோவையும் பார்க்க வேண்டும்.

சாதி அல்லது பண பலத்தை பயன்படுத்தாமல், புதிய பாணி அரசியலில் மக்கள் தங்கள் இடத்தை பிடிக்க வேண்டும். நமக்கு நல்ல அரசியில் கலாசாரம் தேவை என்று குழந்தைகளிடம் நான் குறிப்பிட்டேன். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டினேன்" என்றார்.

மேலும் கலாசார விவகாரங்கள் மற்றும் வனத்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார், "முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த அதிருப்தியும் இல்லை. அவரது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது" என்றார்.

Tags:    

Similar News