அயோத்தி, டெல்லி, மும்பையில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த சதி- பயங்கரவாதிகள் பற்றி பரபரப்பு தகவல்
- நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை சீர்குலைக்க குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர்.
- நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் நேற்று பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதற்காக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 3 முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆவர்.
இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பெயர் முகமது ஷாநவாஸ் ஆலம், முகமது ரிஸ்வான் அஸ்ரப், முகமது அர்ஷத் வர்சி என்று தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களில் முகமது ஷாநவாஸ் ஆலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியை சேர்ந்தவர். இவர் சுரங்க என்ஜினீயர் என்பதால் அவருக்கு குண்டு வெடிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் தெரிந்துள்ளது. அவரது மனைவி பிறப்பால் இந்துவாக இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்.
முகமது அர்ஷத் வர்சியும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அலிகார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் பி.டெக். முடித்து உள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பி.எச்.டி. பட்டத்தையும் பெற்றுள்ளார்.
முகமது ரிஸ்வான் அஸ்ரப் கணினி அறிவியலில் பிடெக் படித்தவர். உத்தர பிரதேசத்தில் உள்ள அசம்கர் பகுதியை சேர்ந்தவர். மதகுருவாகவும் பயிற்சி பெற்றுள்ளார்.
இவர்களில் முகமது ஷாநவாஸ் ஆலம் என்பவர் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளார். மற்ற இருவரும் அவரது கூட்டாளிகள் ஆவர். இந்நிலையில் கைதான 3 பயங்கரவாதிகள் பற்றியும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் மூத்த அதிகாரி எச்.ஜி.எஸ். தலிவால் கூறியதாவது:-
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட நபர்களில் மிக முக்கியமானவர் முகமது ஷாநவாஸ் ஆலம். இவரை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவரது கூட்டாளிகளான முகமது ரிஸ்வான் அஸ்ரப் லக்னோவிலும், முகமது அர்ஷத் வர்சி உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளனர். வட இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் புனேயில் நடந்த சோதனையின் போது முகமது ஷாநவாஸ் ஆலமை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே அவரை பற்றி தகவல் தருபவருக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.
டெல்லியில் முகமது ஷாநவாஸ் ஆலம் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், ரசாயன பொருட்கள், ரிமோட்டுகள், பேட்டரிகள், டைமர்கள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஜிகாதி இலக்கிய புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பலர் அவர்களுடன் தொடர்பில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நன்கு தெரிந்த இடங்களை குறிவைத்து தாக்கி அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. பண்டிகை காலங்களில் அவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டு இருந்தனர். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை சீர்குலைக்க அயோத்தி, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர். இதற்காக இறுதிகட்ட பணியில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் அக்ஷர்தாமையும், மும்பையில் சபாத் ஹவுசையும் குறிவைத்து இருந்தனர்.
கைதான 3 பேரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததுடன், வழக்கமான தகவல்களை அந்த அமைப்புடன் பகிர்ந்து வந்ததும் கண்டறியப் பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயெ வழங்கவும் ஐஎஸ் அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இவர்கள் டெல்லியை தவிர உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மற்றும் மகராஷ்டிராவிலும் முகாம்களை கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.