காலாவதியான விசா.. சட்டவிரோதமாக மனநல சிகிச்சை முகாம்.. போலீசிடம் சிக்கிய அமெரிக்க பெண்
- நாடு திரும்பாமல் அங்கேயே சட்டவிரோதமாக தங்கியிருந்து வந்துள்ளார்.
- விசா காலம் கடந்து தங்கியிருப்பதையும், முகாம் நடவடிக்கை குறித்தும் கண்டுபிடித்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சுற்றுலா விசா முடிந்து ஓராண்டுக்கும் மேலாக மனநல சிகிச்சை முகாம் நடத்தி வந்த அமெரிக்கப் பெண் போலீசிடம் பிடிப்பட்டார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த வனேசா என்கிற பெண், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். ஆனால் ஜூலை 2024-ல் அது காலாவதியாகியுள்ளது. இருப்பினும் அவர் நாடு திரும்பாமல் அங்கேயே சட்டவிரோதமாக தங்கியிருந்து வந்துள்ளார்.
அவர் தங்கியிருந்த காலத்தில், வாடகை வீட்டில் இருந்தபடி மனநல சிகிச்சை முகாமை நடத்தத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே, பணம் இல்லாததால் அந்த பெண்ணை வீட்டு உரிமையாளர் வாடகையின்றி தங்கவும், பணம் இல்லாததால் உணவு மற்றும் பிற தேவைகளையும் வழங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த பெண் விசா காலம் கடந்து தங்கியிருப்பதையும், நடத்திக் கொண்டிருக்கும் முகாம் நடவடிக்கை குறித்தும் கண்டுபிடித்தனர்.
பிறகு, பார்கி போலீஸ் அமெரிக்க தூதரகத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்ததை அடுத்து, பெண் நாட்டைவிட்டு வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டது.
இருப்பினும், அவர் வெளியேற உதவுவதோடு, இந்தியாவில் இருந்தபோது அந்த பெண் என்ன செய்தார் என்பதை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர், தேவையான ஆவணங்களை போலீசார் ஏற்பாடு செய்த நிலையில், அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.