இந்தியா
கொல்கத்தாவில் குண்டுவெடிப்பு.. பையில் இருந்த மர்ம பொருள் சாலையில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு
- குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- பிளாஸ்டிக் பையில் இருந்தே வெடித்ததாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் மத்திய பகுதியில் ப்லோக்மான் தெருவில் [Blochmann Street] உள்ள எஸ்.என்பானர்ஜி சாலையில் சிறிய அளவிலான திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் பிளாஸ்டிக் பையில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் அங்கு வசித்து வந்த குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பையில் இருந்தே குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் டாகடர் கொலையை கண்டித்து ஜூனியர் மருத்துவர்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.