முடிச்சுவிட்டீங்க போங்க.. குஜராத்தில் 5 வருடமாக செயல்பட்ட போலி நீதிமன்றம் - கலெக்டருக்கே பறந்த உத்தரவு
- 2019 முதல் 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்
- தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார்
குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, போலி மருத்துவமனை, போலி அரசு அலுவலகங்கள் அமைத்து நடத்தப்பட்ட மோசடிகள் அம்பலமாகின. இந்நிலையில் இதையெல்லாம் மிஞ்சும் வகையில் போலி நீதிமன்றம் நடத்தப்பட்டு குஜராத்தில் மோசடி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
குஜராத் காந்திநகரைச் சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்ற 37 வயது நபர் கடந்த 2019 முதல் தற்போது 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை ஒரு தீர்ப்பாயத்தின் நீதிபதி போலக் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிய இவர் நிலத்தகராறு பிரச்னைகளுக்கு ஒரு பக்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவதாக கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் சாமுவேல், இருதரப்பு மனுதாரர்களையும் தொடர்பு கொண்டு, உங்கள் பிரச்சனையைத் தீர்க்க அரசு தன்னை நியமித்துள்ளதாகக் கூறுவார். அவர்களை காந்திநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைப்பார்.
இந்த அலுவலகத்தை நீதிமன்றம் போன்று செட் அப் செய்துள்ள அவர், மனுதாரர்களை விசாரணை செய்வதுபோல் பாவலா செய்து தனக்கு யார் பணம் கொடுத்தாரோ அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குவார். சாமுவேலின் கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் நடிப்பார்கள். இதை உண்மையான நீதிமன்றம் என்று நம்பி பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
பால்டி பகுதியில் உள்ள அரசு நிலம் தன்னுடையது என்றும் வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். அவரிடம் பணம் பெற்ற சாமுவேல் இவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார். ஆனால் அந்த உத்தரவு போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பான விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.