இந்தியா (National)

தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை படத்தில் காணலாம்.

கட்சி மாநாட்டில் தீ விபத்து- சிலிண்டர் வெடித்து 2 போலீஸ்காரர் உள்பட 3 பேர் பலி

Published On 2023-04-13 07:20 GMT   |   Update On 2023-04-13 07:20 GMT
  • கட்சி தொண்டர்கள் அலறி அடித்துக் கொண்டு மாநாட்டு பந்தலில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
  • படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம் சீமலா பள்ளியில் சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாநாடு நேற்று இரவு நடந்தது.

இதனால் மாநாட்டு பந்தலில் ஏராளமான கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் குவிந்து இருந்தனர். மாநாட்டில் கலந்து கொள்ள ராமுலு நாயக் எம்.எல்.ஏ, ராம நாகேஸ்வரராவ் எம்.பி. உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் காரில் வந்தனர்.

மாநாட்டு பந்தல் அருகே தலைவர்களின் கார் வருவதை கண்ட தொண்டர்கள் உற்சாக மிகுதியில் பட்டாசுகளை கொளுத்தினர். தொண்டர்கள் கொளுத்திய பட்டாசு தீப்பொறி பறந்து மாநாட்டு பந்தல் கூரையில் விழுந்தது.

இதில் மாநாட்டு பந்தல் தீ பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அலறி அடித்துக் கொண்டு மாநாட்டு பந்தலில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதனால் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கட்சி தொண்டர்களுக்காக மாநாட்டு பந்தலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சமையல் செய்யும் பணி நடந்து வந்தது.

அந்த இடத்தின் மேற்கூரையிலும் தீ பரவியது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுகள் நவீன், தேஜாவத் மற்றும் கட்சித் தொண்டர் பாஸ்கர் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

தீவிபத்தைக் கண்டு கட்சித் தொண்டர்கள் சிதறி ஓடியதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்த விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News