கேரளா நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
- கேரளாவின் தொடுபுழாவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
- இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் உள்ள குடையாத்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், காணாமல் போன மேலும் 2 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.