ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்தார்
- ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்பதற்காக சம்பாய் சோரன் பதவி விலகினார்.
- சம்பாய் சோரன் பாஜக-வில் இணைய இருப்பதாக அசாம் மாநில முதல்வர் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.
கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைத்தது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்காக சம்பாய் சோரன் பதவி விலகினார்.
பின்னர் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பாஜக-வில் இணையப் போவதாக செய்தி வெளியாயின. தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (30-ந்தேதி) தனது ஆதரவாளர்களுடன் சம்பாய் சோரன் பாஜக-வில் இணைய இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
அதன்படி, இன்று ராஞ்சியில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார்.