படிப்பில் நாட்டம் இல்லாததால் விரக்தி: 35-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை
- நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ரெட்டி. இவரது மனைவி ஸ்வப்னா ரெட்டி. தம்பதிக்கு 2 மகன்கள் இவர்களது மூத்த மகன் ராயந்த் ரெட்டி (வயது 14).
இவர் ஐதராபாத், காஜாகுடா பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
மகன்கள் இருவரும் ஐதராபாத்தில் படித்து வருவதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் ரெட்டி தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் கச்சி பவுலி பகுதியில் உள்ள மை ஹோம் பூஜா அடுக்குமாடி குடியிருப்புக்கு குடி பெயர்ந்தார்.
இந்நிலையில் ராயந்த் ரெட்டிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் சரிவர படிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு 8-30 மணி அளவில் ராயந்த் ரெட்டி தனது தாயாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினார். அதில் படிப்பில் இஷ்டம் இல்லாததால் அவமானமாக உள்ளது.
இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் குடியிருப்பு காவலாளிகளுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடினர். தகனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து ராயதுர்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர். நேற்று காலை அடுக்கு மாடி குடியிருப்பின் எச்.பிளாக் படிக்கட்டில் மாணவன் ராயந்த் ரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ராயந்த் ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பின் 35-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.