பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கியாஸ் விலையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தும்: மம்தா
- மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா- திரணாமுல் காங்கிரஸ்க்கு இடையில் நேரடி போட்டி.
- பல்வேறு விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறது பா.ஜனதா.
மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தல் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,500 அல்லது ரூ.2 ஆயிரமாக உயர்த்தும். நாம் சமையல் செய்வதற்கு விறகு சேகரிக்கும் பழைய நடைமுறைக்கு மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். அவர்கள் கட்டித்தரவில்லை என்றால் மே மாதத்திலிருந்து மாநில அரசே அந்த வீடுகளை கட்டத் தொடங்கும்.
ஒரு இளைஞரிடம் 100 நாள் வேலை திட்டத்துக்கான பணம் கிடைத்ததா? என்று கேட்டேன். சுமார் ₹30,000 கிடைத்ததாக கூறினார். இவரைப் போன்றவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்காமல் இருந்த தொகை இதுவாகும். 59 லட்சம் பேருக்கு நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளோம்
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 11 லட்சம் வீடுகள் கட்டுக்கொடுக்க இருக்கிறது. இருப்பினும், சந்தேஷ்காளி பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜகான் ஷேக் நேற்று கைது செய்யப்பட்டது குறித்து மம்தா பானர்ஜி எந்த கருத்தும் கூறவில்லை.