கர்நாடக சட்டசபை தேர்தல்: நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா இன்று காங்கிரசில் சேருகிறார்
- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
- கன்னட திரைத்துறையின் முதன்மை குடும்பத்தின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அத்துடன் கட்சி தாவல்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரை நட்சத்திரங்களும் தங்களுக்கு விருப்பமான கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளனர். நடிகர் சுதீப் ஆளும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கன்னட திரையுலகின் முதன்மை குடும்பமாக கருதப்படும் நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருக்கிறார். முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகளான அவர், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதன்பிறகு அவர் கட்சியில் தீவிரமாக செயல்படவில்லை. கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவரது சகோதரர் மது பங்காரப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவர் தற்போது சொரப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். இந்த நிலையில் கீதா சிவராஜ்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரசில் சேருகிறார். இதன் மூலம் கன்னட திரைத்துறையின் முதன்மை குடும்பத்தின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.