காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் 'கணபதி'யை கூட சிறையில் அடைத்தனர்- பிரதமர் மோடி
- கர்நாடகாவில் மசூதி அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது வன்முறை வெடித்தது.
- போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகமங்கலா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது.
இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை காவல்துறை வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.
இந்த வன்முறை சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரியானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இந்த வன்முறை சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
குருஷேத்ராவில் உரையாற்றிய மோடி, "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை தடுக்கிறது. இன்று இருப்பது பழைய காங்கிரஸ் கட்சி அல்ல. இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறிவிட்டது. பொய் பேசுவதற்கு காங்கிரஸ் வெட்கப்படாது. இன்று காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் கணபதியைக் கூட சிறையில் அடைக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.