கொள்ளையடிக்கப்பட்ட 6000 ஆயுதங்கள் மீட்கப்படும் வரை மணிப்பூரில் அமைதி நிலவாது- காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய்
- பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.
- உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது.
மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவரும், எம்.பியுமான கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் மாநிலத்தின் சாமானிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.
எனவே, இரு சமூகத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசாதபோது எப்படி அமைதி மற்றும் சகஜநிலை ஏற்படும்.
மாநில முதல்வர் பிரேன் சிங்கின் செயல்பாட்டால் மெய்டீஸ் மற்றும் குகிஸ் ஆகிய இரு சமூகமும் மகிழ்ச்சியடையவில்லை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது. அமைதிக் குழுக்களில் முதல்வர் இருப்பதுதான் அமைதி பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது.
பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார். இதனால், நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் 60,000 பேரின் நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வு இல்லாமலும், 6000 ஆயுதங்கள் மீட்கப்படும் வரையிலும் அமைதி திரும்பாது" என்றார்.