இந்தியா

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்வு

Published On 2024-06-20 02:45 GMT   |   Update On 2024-06-20 02:45 GMT
  • வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்திய உணவு கழகத்திடம் 53.4 மில்லியன் டன் நெல் கையிருப்பில் உள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 3-வது முறையாக மோடி அரசு அமைந்த பிறகு எடுக்கப்பட்ட முதலாவது மந்திரிசபை முடிவு இதுவே ஆகும்.

இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2024, 2025 கோடை கால சாகு படிக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தப்படுகிறது. இதனால், சாதாரண ரக நெல் விலை, குவிண்டாலுக்கு ரூ.2,300 ஆகவும், முதல்ரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,320 ஆகவும் உயரும்.

வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கான உற்பத்தி செலவைப்போல் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை 2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் இருந்து கடைபிடித்து வருகிறோம்.

இந்திய உணவு கழகத்திடம் 53.4 மில்லியன் டன் நெல் கையிருப்பில் உள்ளது. இது, ஜூலை 1-ம்தேதிப்படி தேவையானதை விட 4 மடங்கு அதிகம். புதிதாக கொள்முதல் செய்ய தேவையின்றி, ஓராண்டுக்கு நலத்திட்டங்களுக்கு வழங்குவதற்கும் போதுமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளை ரூ.2,869 கோடி செலவில் மேற்கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதில், புதிய முனைய கட்டிடம் கட்டுதல் மற்றும் ஓடுதள விரிவாக்க பணிகள் செய்யப்படும்.

காற்றாலை மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும்வகையில், ரூ.7, 453கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இவற்றில், ரூ.6,853 கோடி செலவில், 1 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதும் அடங்கும்.

அதாவது, குஜராத் கடலோர பகுதியிலும், தமிழ்நாட்டு கடலோர பகுதியிலும் தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் திட்டங்கள் நிறுவப்படும்.

Tags:    

Similar News