இந்தியா

விபத்தில் காயமடைந்தவருக்கு அட்டைப் பெட்டியில் கட்டுப் போட்ட அரசு மருத்துவமனை - வைரல் வீடியோ

Published On 2024-06-15 12:29 GMT   |   Update On 2024-06-15 12:29 GMT
  • 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
  • இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நிதிஷ் குமார் என்ற அந்த இளைஞர் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மினாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர் முஸாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் மெத்தனப் போக்குக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

Tags:    

Similar News