இந்தியா

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி: நிதி மந்திரி அறிவிப்பு

Published On 2023-07-11 15:06 GMT   |   Update On 2023-07-11 15:06 GMT
  • மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
  • புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத நிலையில் இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக தெரிவித்தார்.

'புற்றுநோய்க்கான மருந்துகள், அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்காக உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags:    

Similar News