ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் அகற்றலாம்- சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
- சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
- தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.
புதுடெல்லி:
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையின் சிவில் மற்றும் கட்டுமான பாதுகாப்பு, உறுதி மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு உயர் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓர் அறிக்கையை அளித்தது.
இந்த குழு தீவிரமான கட்டுமான குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தது.
இதனையடுத்து கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் ஆலையில் மீதியுள்ள ஜிப்சத்தை அகற்றும் நடவடிக்கையை, அதற்கு தேவையான வேலையாட்களை, லாரி முதலிய எந்திரங்களை அனுமதிக்கலாம். ஜிப்சம் முழுவதும் அகற்றப்பட்டபிறகு அதற்கான அனுமதி திரும்ப பெறப்படும். இந்த பணியை செய்ய எவ்வளவு நாள், எவ்வளவு ஆட்கள், எந்திரங்கள் தேவை என்ற விரிவான முன்மொழிவை ஆலை வழங்க வேண்டும்.
ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவு நீர் வெளியாகும் வரையில், அதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், தினசரி கழிவு நீரை மீண்டும் கழிவுக்குழிக்குள் பம்பிங் செய்யும் நடவடிக்கையை அனுமதிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 4-வது கழிவுக்குழியின் கரை உடைவதை தடுப்பதற்காக அதனை சீர் செய்யும் வேலையை அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆட்களை கொண்டு இதனை செய்ய வேண்டும்.
பசுமை வட்டப் பராமரிப்பு, புதர்களையும், காய்ந்த மரங்களையும் அகற்றும் பணிகளைப் பொறுத்தவரை ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரின் மேற்பார்வையின்கீழ் நடக்க வேண்டும்.
மேற்கண்ட 4 நடவடிக்கைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதிக்கலாம் என்று கூடுதல் தலைமைச் செயலாளரின் கடிதம் குறிப்பிடுகிறது.
அதே நேரம், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை என்பதையும் கோர்ட்டு குறிப்பிட்டது.
ஆலை வளாகத்தில் சிவில், கட்டுமானப் பாதுகாப்பு, உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரிபாகங்களை வெளியே கொண்டு செல்வது, பிற கச்சா பொருட்களையும், தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.
கூடுதல் தலைமைச்செயலாளர் கடிதத்தில் அனுமதி அளித்த செயல்பாடுகளை பொறுத்தவரை, அதற்கு தேவையான நடவடிக்கைகளை கோர்ட்டு அனுமதிக்கிறது.
மாவட்ட கலெக்டர் பரிந்துரை அளிக்காத நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இது தொடர்பாக மேற்கொண்டு கூடுதல் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்க வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.
இந்த அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு சீர்தூக்கிப் பார்த்து தமது கருத்தை மே மாதம் 4-ந் தேதி நடக்கும் அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.