இந்தியா

ஹத்ராஸ் கூட்ட நெரிசல்: போலி சாமியார்களை சமாளிக்க புது சட்டங்கள் தேவை - கார்கே

Published On 2024-07-03 15:11 GMT   |   Update On 2024-07-03 15:11 GMT
  • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
  • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசினார். அப்போது, "ஹத்ராஸ் போன்ற கூட்டநெரிசல் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், இத்தகைய போலி சாமியார்களை சமாளிப்பதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

போலி சாமியார்களால் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் குருட்டு நம்பிக்கையில் கலந்து கொள்கின்றனர். இத்தகைய மத நிகழ்ச்சிகளை நாம் ஒழுங்குபடுத்தவேண்டும். இத்தகைய கூட்டங்கள் எங்கு நடத்த வேண்டும். எவ்வளவு பரப்பளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடத்தும் இடத்திற்கு அருகில் மருத்துவமனை இருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும்.

இப்போது பல போலி சாமியார்கள் சிறையில் இருக்கின்றனர். மத கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த சட்டமும் இல்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து மக்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்படவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News