இந்தியா

பாலியல் புகார்- கேரள முதல்வரிடம் விளக்கம் அளித்த நடிகர் முகேஷ்

Published On 2024-08-29 09:21 GMT   |   Update On 2024-08-29 10:16 GMT
  • நடிகர் சித்திக் மீது புகார் கூறிய நடிகையிடம் திருவனந்தபுரத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது.
  • பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அதில் மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர். அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர். திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், கொல்லம் நகரங்களுக்கு சிறப்பு விசாரணை குழுவினர் நேரில் சென்று நடிகைகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

நடிகர் சித்திக் மீது புகார் கூறிய நடிகையிடம் திருவனந்தபுரத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது. நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறிய 2 நடிகைகளிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலங்களில் அவர்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஒரு நடிகை அளித்த வாக்குமூலத்தில், "என்னை பிரபல நடிகர் கழிவறைக்குள் தள்ளி பாலியல் துன்புறுத்தல் செய்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் கள் மீது மேலும் பல நடிகை கள் புகார் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சித்திக் மீது 376 மற்றும் 506 சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கேரளாவில் இரண்டாவது முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில் பாலியல் புகார் குறித்து நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வுமான நடிகர் முகேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகைகள் தன் மீது பொய் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதோடு தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை தன்னை பணம் கேட்டு மிரட்டியதற்கான வாட்ஸ் அப் பதிவுகள் உள்ளதாக கேரள முதல்வரிடம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News