அரசுப் பணிகளில் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை அதிரடியாக அதிகரித்த அரியானா அரசு.. பின்னணி என்ன?
- ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
- அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.
அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.
இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.