இந்தியா

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரத்தை விசாரிக்க சிறப்புக் குழு- யோகி ஆதித்யநாத்

Published On 2024-07-03 10:18 GMT   |   Update On 2024-07-03 10:18 GMT
  • போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் கூட்ட நெரிசல்.
  • 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேர் பங்கேற்பு.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஹத்ராஸ் பகுதிக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது:-

முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "மீட்பு மற்றும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை.

மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உ.பி., ஹரியானா, ம.பி., ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கிட்டத்தட்ட அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

நான் நேரில் பார்த்த பலருடன் உரையாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும், சத்சங்கப் சாமியார் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று பல பெண்கள் அவரைத் தொட, 'சேவதர்கள்' அவரை நோக்கிச் செல்லத் தொடங்கினர். அவர்களை தடுத்து நிறுத்தியதால், இந்த விபத்து நடந்தது.

கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News