கனமழை: தாயின் கையில் இருந்து நழுவி விழுந்த குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
- மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.
- 4 மாத கைக்குழந்தை திடீரென நழுவி சாக்கடைக்குள் விழுந்தது.
மும்பை :
மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதில் தானே மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வகையில் கல்யாண் நோக்கி சென்ற மின்சார ரெயில் ஒன்று தாக்குர்லி- கல்யாண் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடுவழியில் நின்றது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் பலர் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர்.
இதேபோல பிவண்டியை சேர்ந்த யோகிதா (வயது25) என்ற பெண் பயணியும் தனது 4 மாத பெண் குழந்தையுடன் ரெயிலில் இருந்து இறங்கினார். சாக்கடை கால்வாய் மேலே இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது யோகிதா கையில் இருந்த 4 மாத கைக்குழந்தை திடீரென நழுவி சாக்கடைக்குள் விழுந்தது. அந்த குழந்தை சாக்கடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதைப்பார்த்து குழந்தையின் தாய் கதறி அழுதார். அந்த வழியாக சென்றவர்கள் யோகிதாவை ஆசுவாசப்படுத்தினர்.
தகவல் அறிந்த கல்யாண் ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். கால்வாயில் அடித்து செல்லப்பட்ட கைக்குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மும்பை பரேலில் உள்ள கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு பிவண்டி திரும்பியபோது யோகிதாவிற்கு இந்த துயரம் நேர்ந்துள்ளது. தாயின் கையில் இருந்து நழுவி விழுந்த கைக்குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.