இந்தியா (National)

ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை.

ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை மூடப்படுகிறது- திருப்பதி தேவஸ்தானம்

Published On 2024-10-17 02:41 GMT   |   Update On 2024-10-17 02:41 GMT
  • பாபவிநாசனம் சாலையில் பக்தர்களின் நுழைவை தேவஸ்தானம் ஏற்கனவே மூடி தடுத்துள்ளது.
  • மழை நிலவரம் குறித்து பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க எஸ்.வி.பி.சி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமலை:

கனமழை எச்சரிக்கையால் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை இன்று முதல் மூடப்படுகிறது, என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் காணொலி காட்சி மூலம் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் பேசியதாவது:-

திருப்பதி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை வரையிலும், அதன்பிறகு அடுத்த 36 மணி நேரத்துக்கும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவஸ்தான முக்கியத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பிற துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, நிலைமையை மதிப்பிடுவதற்கும், ஒவ்வொரு துறையின் தயார் நிலை குறித்தும் விரிவாகக் கேட்கப்பட்டது.

இடைவிடாத மழையைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள கோகர்ப்பம் சர்க்கிளில் இருந்து தொடங்கும் பாபவிநாசனம் சாலையில் பக்தர்களின் நுழைவை தேவஸ்தானம் ஏற்கனவே மூடி தடுத்துள்ளது.

இந்தநிலையில் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை இன்று (வியாழக்கிழமை) முதல் முழுமையாக மூடப்படுகிறது. சூறாவளி காற்று, மழை குறைந்த பிறகு இந்த நடைபாதையில் பக்தர்கள் திருமலைக்கு நடந்து வர நடவடிக்கை எடுப்பது குறித்து பின்னர் ஆலோசனை செய்யப்படும்.

திருப்பதி மலைப்பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டாலும், பாறைகள் உருண்டு கீழே விழுந்தாலும் அவற்றை அகற்ற, தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு போதுமான எரிபொருளை (டீசல்) வைத்திருப்பது குறித்து பொறியாளர் பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவக் கருவிகள், ஆம்புலன்சுகள், மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை நிலவரம் குறித்து பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க எஸ்.வி.பி.சி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவஸ்தான போக்குவரத்துப் பிரிவு பொது மேலாளர், பறக்கும்படை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி, மருத்துவக் கண்காணிப்பாளர் (சிவில் அறுவை சிகிச்சை நிபுணர்), என்ஜினீயர்கள் உள்பட 15 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைப் பதிலளிப்புப் படைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மழை வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

காணொலி காட்சி நிகழ்ச்சியில் இணை அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மன், பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், என்ஜினீயர் சத்யநாராயணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News