கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.