மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. மும்பைக்கு ரெட் அலர்ட் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- சத்திரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
- காட்கோபர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் பல்வேறு நகரங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக இன்று மாலை முதல் மும்பை, தானே உள்ளிட்ட நகரங்களில் அதி கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று [செப்டம்பர் 26] விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் நகரின் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சத்திரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தும் கனமழையால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள காட்கோபர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.