ஜார்கண்ட் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார் ஹேமந்த் சோரன்
- சாம்பை சோரன் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.
- ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். சம்பாய் சோரனின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுள்ளார்.
மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார்.
இந்நிலையில், ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து, ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 7ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.