'ஒரு ராத்திரிக்கு எவ்வளவு'.. சப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்த பெண்ணின் திடுக்கிடும் வாக்குமூலம்
- அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்ட்டர் கிரிராஜ் என்னிடம், உன்னை பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, ஒரு ராத்திரிக்கு எவ்வளவு என்று கேட்டார்.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கன்னத்தில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் கடந்த ஜூலை 11 வியாழக்கிழமை அதிகாலை சக ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை நிறுத்தி, விமான நிலைய நுழைவுவாயிலில் விமான குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது அனுராதாவிடம் தகாத முறையில் ஆபாசமாக கிரிராஜ் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம்ஏற்பட்டு அனுராதா ராணி கிரிராஜின் கன்னத்தில் அறைந்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. ஆனால் அவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளால் தகாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையை அணுகி உள்ளோம். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம் என்றார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனுராதா ராணி தற்போது கிரிராஜ் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முனவித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'ஜூலை 11 காலை 4.30 மணிக்கு நான் எனது வேலையை செய்ய வந்தேன். அப்போது சப்-இன்ஸ்பெக்ட்டர் கிரிராஜ் என்னிடம், உன்னை பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, ஒரு ராத்திரிக்கு எவ்வளவு ரேட் என்று கேட்டார்.
உங்கள் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்று நான் கூறியதற்கு, நான் சொல்வதைக் கேள், நீ நன்றாக உணர்வாய், வேலை வேகமாக முடிந்துவிடும் என்று தெரிவித்தார். இதனால் அவரை அறைந்தேன். நான் போலீஸ் புகார் அளிப்பதற்கு முன் அவர் என்மீது புகார் அளித்துவிட்டார்' என்று தெரிவித்தார். விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் இல்லாததால் மற்ற பெண் பணியாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.