இந்தியா

'ஐ லவ் இந்தியா'.. திருடிய காரில் மன்னிப்பு கடிதம் - தேசப்பற்றுள்ள திருடனா இருப்பாரோ..

Published On 2024-10-14 11:30 GMT   |   Update On 2024-10-14 11:30 GMT
  • டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிக்கானர் [ Bikaner ] பகுதியில் கார் நின்றுகொண்டிருந்தது.
  • இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும்.

காரை திருடிவிட்டு பிறகு மனம் கேட்காமல் அதில் மன்னிப்பு கடிதம் எழுதிவைத்து ரோட்டிலேயே திருடன் விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் பாலாம் காலனியை [Palam colony] சேர்ந்த வினய் குமார் என்பவரின் ஸ்கார்பியோ கார் சமீபத்தில் திருடுபோயுள்ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி காரின் உரிமையாளர் வினய் குமார் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

 

அதன்படி எப்ஐஆர் பதித்து டெல்லி போலீஸ் காரை தேடிவந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் ராஜஸ்தானில் உள்ள பிக்கானர் [Bikaner] பகுதியில் திருடுபோன அந்த ஸ்கார்பியோ கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த காரின் பின்புற கண்டாடியில் காகிதங்கள் ஒட்டப்பட்ட நிலையில் இருந்தன. அதில், இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் அந்த காரின் நம்பர் எழுதப்பட்டிருந்தது. இது காரை மீண்டும் உரிமையாளரிடம் சிரமமின்றி ஒப்படைக்க திருடன் எழுதி வைத்த தகவல். மற்றொரு காகிதத்தில் நான் இந்தியாவை நேசிக்கிறேன் [I LOVE INDIA] என்று  எழுதப்பட்டு மற்றொன்றில் இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது, உடனே போலீசுக்குச் சொல்லுங்கள், அவசரம் என்று எழுதப்பட்டுள்ளது.

 

ஜெய்ப்பூர் பிக்கானர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இந்த காரை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்  போலீசுக்கு புகார் அளித்ததன் மூலம் கார் மீட்கப்பட்டுள்ளது. இந்த கார் வேறு ஏதேனும் குற்றச்செயல்களுக்காக திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News