இந்தியா

சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள குகி எம்.எல்.ஏ.க்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு: மணிப்பூர் முதல்வர்

Published On 2024-07-25 15:25 GMT   |   Update On 2024-07-25 15:25 GMT
  • 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டம் 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 31-ந்தேதி முதல் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் 10 குகி-சோ (Kuki-Zo) எம்.எல்.ஏ.க்களை பங்கேற்கும்படி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என மணிப்பூர் முதல்வர் பிரேண் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் ஒத்துழைப்புக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.

இரண்டு மந்திரிகள் உள்பட 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. மணிப்பூரில் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையில் நடைபெற்ற வன்முறை காரணமாக கலந்து கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தொடர், கூட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதில் குகி-சோ எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் 5-வது கூட்டத்தொடர் பிப்ரவரி 28-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை நடைபெற்றது.

நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்து, தற்போது நிலவும் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பேன். நேர்மறையான முடிவுகள் ஏற்படும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றார்.

ஜிரிபாம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற தீவைப்பு சம்பவம் குறித்து கூறுகையில் "நான் விசாரணை நடத்தினேன். இரண்டு சமூகத்தினரின் தலைவர்களுடன் பேசினேன். இரண்டு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது வன்முறையை நிலைநிறுத்த முயல்பவர்களின் வேலையாகத் தெரிகிறது" என்றார்.

கடந்த புதன்கிழமை ஆளில்லா வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் வன்முறை வெடித்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் வீடு ஆளில்லாமல் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News