இந்தியா

அஜித் பவார் பக்கத்தில் அமர்ந்தால் குமட்டிக்கொண்டு வருகிறது.. அமைச்சரால் பாஜக கூட்டணியில் பூகம்பம்!

Published On 2024-08-31 16:39 GMT   |   Update On 2024-08-31 16:39 GMT
  • அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.
  • தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் சொந்த கூட்டணி அரசை எதிர்த்தே அஜித் பவார் தேசியவாத காங்கிரசார் போராட்டம் நடத்தியது அந்த விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதற்கெல்லாம் மேலாக, மஹாயுதி கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரசுடன் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா காட்சியைச் சேர்ந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ள கருத்து கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தாராஷிவ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய தனாஜி சாவந்த், நான் அசல் சிவசேனா காரன், எனது மாணவப் பருவத்தில் இருந்தே தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசை எனக்கு பிடித்ததில்லை. இதுதான் உண்மை. அதனால் இப்போது சட்டமன்றத்தில் அஜித் பவாருடனும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுடன் அருகருகே அமருவதை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து அஜித் பவார் அணியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறுய்த்து பேசிய அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் உமேஷ் பாட்டீல் கூறுகையில், எங்களை அவமதிக்கும் வகையில் தானாஜி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருப்பதை விட, மஹாயுதி கூட்டணியை விட்டு வெளியேறுவதே சிறந்தது. தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அஜித் பவார், நான் மக்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன், விமர்சனங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. எனக்கு எதிராக பேசுபவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சுயமரியாதையை இழந்து, இன்னும் அந்த கூட்டணியில் அஜித் பவார் நீடிக்க வேண்டுமா?' என சரத் பவார் அணி தேசியவாத காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Tags:    

Similar News