இந்தியா

சைனி அரசை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி செய்தால் ஆதரவு அளிப்போம்: துஷ்யந்த் சவுதாலா

Published On 2024-05-08 11:34 GMT   |   Update On 2024-05-08 11:34 GMT
  • சைனி தலைமையிலான அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெற்றனர்.
  • தற்போது 88 எம்.எல்.ஏ.-க்கள் உள்ள நிலையில், பா.ஜனதா அரசு மைனாரிட்டி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அரியானா மாநிலத்தில் சைனி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வந்த மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் பா.ஜனதாவின் பலம் 43 ஆக குறைந்துள்ளது.

இதனால் பா.ஜனதா மெஜாரிட்டியை இழந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஹூடா தெரிவித்துள்ளார். அதேவேளையில் தங்களுக்கு போதுமான அளவு ஆதரவு இருப்பதாக பா.ஜனதா கூறி வருகிறது.

ஜனநாயக் ஜன்தா கட்சி (ஜேஜேபி) ஆதரவு அளித்தால் பா.ஜனதா ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஜேஜேபி உடனான உறவை பா.ஜனதா முறித்திருந்தது.

இந்த நிலையில் ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, சைனி தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டால், நாங்கள் ஆதரவு அளிப்போம் என துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துஷ்யந்த் சவுதாலா கூறியதாவது:-

சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றால், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை கவிழ்ப்பதற்கு வாக்கு அளிப்பார்கள். ஜேஜேபி கொறடா உத்தரவு பிறப்பித்து அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

தற்போது மக்களவையில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவரான பூபிந்தர் சிங் ஹூடா, மக்களவை தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோரினால், நாங்கள் அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலனை செய்வோம்.

தற்போது காங்கிரஸ் பா.ஜனதா அரசை கவிழ்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்பதில் தெளிவாக உள்ளோம்.

இவ்வாறு துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

பா.ஜனதாவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். ஜேஜேபி-க்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர்.

தற்போது அரியானா சட்டமன்றத்தில் 90 இடங்களில் 88 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 45 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பாஜனதாவுக்கு 2 சுயேட்சை எம்எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News