பிரதமருக்கு ரூ.1000 கோடி கொடுத்தேன் என்று சொன்னால் அவரை கைது செய்வீர்களா? கெஜ்ரிவால் கேள்வி
- கெஜ்ரிவால் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
- பஞ்சாப் மாநிலத்தில் அதே மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு வருவாய் அதிகரித்துள்ளதாக கெஜ்ரிவால் தகவல்
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த ஆண்டு மாநில அரசு அமல்படுத்திய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மதுபான கொள்கை, மது விற்பனை மீதான அரசின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், தனியார் சில்லறை விற்பனையாளர்களுக்கு தேவையற்ற நன்மைகளை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது பாஜகவைம் பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:-
நீதிமன்றங்களில் பொய்யான தகவல் தாக்கல் செய்யப்படுகிறது, கைது செய்யப்பட்டவர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஒரு துளி கூட ஆதாரம் இல்லை. சிபிஐ நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் கோவா தேர்தல் பிரச்சாரத்தில் பணம் புழங்கியதாக கூறுகின்றனர். இதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? நாங்கள் செலவு செய்த பணம் அனைத்தும் காசோலைகள் மூலம் செய்யப்பட்டன. எங்களுக்கு கிடைத்ததாக நீங்கள் கூறும் 100 கோடி ரூபாயில் ஒரு ரூபாயையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.
கடந்த செப்டம்பர் 17ம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமர் மோடிக்கு 1,000 கோடி ரூபாய் கொடுத்தேன் என ஆதாரம் இல்லாமல் நான் கூறினால், அவரை கைது செய்வீர்களா? பொய்யான தகவல் கூறுதல் மற்றும் பொய்யான ஆதாரம் கொடுத்ததற்காக விசாரணை அமைப்புகள் மீது வழக்கு தொடருவேன்.
இவர்கள் ஊழல் நடந்ததாக கூறும் அதே மதுபானக் கொள்கை, பஞ்சாப் மாநிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டு, 50 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. இது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் வெளிப்படையான கொள்கை. நாளைய விசாரணைக்கு ஆஜராவேன்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.