இதே ஒரு மசூதியில் நடந்திருந்தால்?.. திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாண் கேள்வி
- பவன் கல்யாண் இன்று முதல் வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்
- ஏன்! இந்துக்களுக்கு உணர்வுகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விநியோகிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரசாதமான லட்டு மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று முதல் வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். விரத முடிவில் முவில் அக்டோபர் 1,2-ந் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற அனாச்சாரங்கள் நடபத்தை தடுக்க தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷனா [பாதுகாப்பு] சங்கம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பிற மதங்களை ஒப்பிட்டு இந்த விவகாரத்தில் பவன் கல்யாண் மற்றொரு கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
அதாவது, திருப்பதி கோவிலில் நடந்ததுபோல தேவாலயத்திலோ, மசூதியிலோ நடந்திருந்தால் இந்நேரம் நாட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அந்த விஷயம் உலகம் முழுவதும் பேசப்பட்டு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கும். ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் மத நம்பிக்கை புண்பட்டுள்ள வேளையில் நாம் மதச்சார்பற்றவர்கள் எனக் கூறி இதை பிரச்சனையாக வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏன்! இந்துக்களுக்கு உணர்வுகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.