மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும்.
- சுல்தானியா பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியதால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். டெல்லி என்சிஆர் பகுதிகளில் லேசான மழை தொடரும்.
வரும் நாட்களில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும்.
ராய்காட் பகுதிக்கு ரெட் அலர்ட்டும், மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, சதார் மற்றும் மகாராஷ்டிராவின் கொல்காபூர் ஆகிய இடங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில், தானேயில் உள்ள பிவாண்டி பகுதியில் உள்ள கம்வாரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுல்தானியா பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியதால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கர்நாடகாவின் தெற்கு உள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நேற்று பெய்த கனமழைக்கு மத்தியில் அரகா, செண்டியா, இடூர் மற்றும் தொடுரு கிராமங்களில் பல பகுதிகள் முற்றிலும் நீரில் மூழ்கின. குடகு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன.
டெல்லி என்சிஆர் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.