பணப்பற்றாக்குறை காரணமாக கட்சிக்கு நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரம்- சிறிய நன்கொடைகளையும் வரவேற்பதாக அறிவிப்பு
- கடந்த 4 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சி ரூ.5 ஆயிரம் கோடி நிதி பெற்று இருப்பதாக தகவல் வெளியானது.
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் வரை நன்கொடை அளிக்கும் நன்கொடையாளர் தனது பான் எண்ணை சமர்ப்பிக்க தேவை இல்லை.
புதுடெல்லி:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் செலவினங்களுக்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் மற்றும் காசோலை மூலமாக நன்கொடையாக இதனை கட்சிகள் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு கட்சியும் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சி ரூ.5 ஆயிரம் கோடி நிதி பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தேர்தல் பத்திர திட்டங்கள் பாரதிய ஜனதா அரசுக்கு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் நன்கொடைகள் மற்றும் நிதி திரட்டுவதற்கு ஒரு பிரத்யேக தளத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் வரை நன்கொடை அளிக்கும் நன்கொடையாளர் தனது பான் எண்ணை சமர்ப்பிக்க தேவை இல்லை. அதற்கு மேல் பெறப்படும் பணத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
எனவே ரூ.100 அல்லது 500, 1000 ரூபாய் என சிறிய நன்கொடையாக இருந்தாலும் வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நிதி குறைந்து கொண்டே வருகிறது. கட்சிக்கு நன்கொடை வழங்கி வந்த பெரும்பாலானோர் ஆளும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக சாய்ந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், கட்சி செலவை சமாளிக்க நிதி திரட்டும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் கட்சியின் அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.