இந்தியா

60 வயதானவர்கள் முககவசம் அணிய சுகாதார துறை அறிவுறுத்தல்

Published On 2023-12-19 04:02 GMT   |   Update On 2023-12-19 04:03 GMT
  • புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன்.
  • 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும்.

பெங்களூரு:

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் உருமாறிய ஜே.என்-1 வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாநில அரசு புதிய வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதால் கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இதில் கொரோனாவை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சில ஆலோசனைகளை அந்த குழு வழங்கியுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. இன்னும் 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும். தற்போதைக்கு கர்நாடகம் சகஜ நிலையில் உள்ளது. பாதிப்பு அதிகரித்தால் மட்டும் பல்வேறு தடைகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது அத்தகைய சூழ்நிலை எழவில்லை. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News