இந்தியா

மத்திய பிரதேசத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தையை சித்ரவதை செய்து செல்பி எடுத்து மகிழ்ந்த கிராம மக்கள்

Published On 2023-08-31 07:09 GMT   |   Update On 2023-08-31 07:09 GMT
  • கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
  • சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இந்த வனப்பகுதியில் இருந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தை ஒன்று அருகில் உள்ள இக்லேரா கிராமத்திற்குள் புகுந்தது.

அந்த சிறுத்தை நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு மெதுவாக சென்றது. இதை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுத்தை அருகில் சென்றனர். பின்னர் அந்த சிறுத்தையை சுற்றி நின்று கொண்டு அதன் வேதனையை பற்றி கவலைப்படாமல் கைத்தட்டி சிரித்தனர். மேலும் அதனை கையால் தள்ளி சித்ரவதை செய்தனர். அந்த சிறுத்தையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுத்தை மீது ஏறி சவாரி செய்யவும் முயன்றார். இதை பார்த்த சிலர் அந்த கும்பலிடம் இது போன்று செய்யாதீர்கள், பாவம் சிறுத்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளது என்று கூறினார்கள், ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை கொடுமை படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தனர்.

மேலும் ஒரு சிலர் அந்த சிறுத்தையை ஊருக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதனை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

அந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண் காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராம மக்கள் சிறுத்தையை கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News