இந்தியா

பாராளுமன்ற கூட்டுக்குழுவில் சலசலப்பு: ஆத்திரத்தில் கண்ணாடி டம்ளரை உடைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

Published On 2024-10-22 14:52 GMT   |   Update On 2024-10-22 14:52 GMT
  • வக்பு வாரிய திருத்த சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கல்யாண் பேனர்ஜி தனது அருகிலுள்ள கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததாகவும், அதில் உடைந்த கண்ணாடி துண்டு கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அருகிலுள்ள எம்.பி.க்கள் கல்யாண் பேனர்ஜிக்கு முதலுதவி செய்தனர். அதன்பின், அவருக்கு கையில் 4 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

பாராளுமன்ற கூட்டுக் குழுவில் சலசலப்பு ஏற்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News