இந்தியா

முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2022-06-12 01:35 GMT   |   Update On 2022-06-12 01:35 GMT
  • எதிர்கட்சியினர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • கருப்பு முககவசம் அணிந்து சென்ற பத்திரிக்கையாளர்களின் முககவசங்கள் அகற்றப்பட்டன.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தங்கம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது மனைவி, மகளுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் எதிர்கட்சியினர் கடந்த 5 நாட்களாக பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆங்காங்கே முதல்-மந்திரி செல்லும் இடங்களில் சாலை மறியல், கருப்பு கொடி காட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று கொச்சியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு கருப்பு உடை அணிந்து வந்த திருநங்கைகள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல் கருப்பு முககவசம் அணிந்து சென்ற பத்திரிக்கையாளர்களின் முககவசங்கள் அகற்றப்பட்டன. முதல்-மந்திரி கலந்து கொள்ளும் விழாக்களில் கருப்பு முக கவசம் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வழக்கத்தைவிட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் வழிநெடுக பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News