இந்தியா
null

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கும் இந்தியா கூட்டணி - வடக்கில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு

Published On 2024-06-04 03:51 GMT   |   Update On 2024-06-04 03:53 GMT
  • உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலை 9.00 மணி நிலவரப்படி பாஜக பின்னிலையில் உள்ளது.
  • ராஜஸ்தானில் 7 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 10 இடங்களிலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

 நடந்து முடித்த பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வரும் நிலையில் முன்னிலை நிலவரங்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இதனைக் காங்கிரஸின் இந்தியா கூட்டணி மறுத்துள்ளது. பொய்யான கருத்துக்கணிப்புகளை பாஜக மக்களிடம் திணிக்கிறது என்றும் கருத்துக்கணிப்புக்கு நேரெதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் வடக்கில் முக்கிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலை 9.00 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக பின்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் 7 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 10 இடங்களிலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 60 முதல் 71 இடங்களை பாஜக வெல்லும் என்றும் இந்தியா கூட்டணி 10 இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 இடங்களில் 20 வரை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 22 முதல் 35 இடங்களை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த கணிப்புகளுக்கு நேர் மாறாக பாஜக கூட்டணி இந்த 3 மாநிலங்களிலும் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடப்பது கவனிக்கத்தக்கது. 

Tags:    

Similar News