கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிப்பை வலியுறுத்தி ஜூலை 30-ந்தேதி இந்தியா கூட்டணி பேரணி
- ஜெயிலுக்குள் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி.
- அவரது உடலில் 26 முறை சர்க்கரை அளவு குறைந்துள்ளது.
டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கெஜ்ரிவால் உடல்நிலை மோசமடைந்துள்ளதை வலியுறுத்தி ஜூலை 30-ந்தேதி இந்தியா கூட்டணி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்துகிறது.
ஜெயிலில் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது. ஜெயிலில் ஜூலை 3-ந்தேதியில் இருந்து ஜூலை 7-ந்தேதி வரை 26 முறை அவரது சர்க்கரை அளவு 26 முறை குறைந்ததாக மெடிக்கல் ரிப்போர்ட் சொல்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா கெஜ்ரிவால் வாழ்க்கையுடன் விளையாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கும் என்பது பாஜகவுக்கு தெரியும். இதனால் அவர்கள் சிபிஐ மூலம் கைது செய்தனர். கெஜ்ரிவால் கடந்த 30 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
காவலில் இருக்கும்போது அவருடைய உடல் எடை 8.5 கிலோ குறைந்தது. அவரது சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட்டு துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசுடன் பகிரப்பட்டது. கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளது அவர்களுக்குத் தெரியும் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.