சரக்கு கப்பல் மீது தாக்குதல்: அரபிக்கடலில் 3 போர்க்கப்பல்களை பாதுகாப்புக்கு நிறுத்தியது இந்தியா
- இந்தியா வந்த சரக்கு கப்பல் மீது அரபிக்கடலில் வைத்து டிரோன் தாக்குதல்.
- இதனால் பாதுகாப்பு பணியில் 3 போர்க்கப்பல்களை இந்தியா அப்பகுதியில் நிறுத்தியுள்ளது.
அரபிக் கடலில் லைபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் எம்.வி. கெம்புளூட்டோ மீது கடந்த 23-ந்தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கடந்த 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது.
இதேபோன்று செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் மீது 23-ந்தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் இந்திய எல்லையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மோர்முகாவோ, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
தொலைதூர கண்காணிப்புக்கு அதிநவீன பி-81 என்ற ரோந்து விமானத்தையும் இந்திய விமானப்படை ஈடுபடுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த 23-ந்தேதி தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் நேற்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது. இந்திய கடற்படையின் வெடிகுண்டு நிபுணர் குழு அந்தக் கப்பலை ஆய்வு செய்தது.