பெட்ரோலுடன் 10 சதவீத எத்தனால் கலப்பு- 5 மாதங்களுக்கு முன்பே இலக்கை எட்டியது இந்தியா
- இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது.
- எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இலக்கு எட்டப்பட்டது.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், எரிபொருள் இறக்குமதியை குறைத்தல், அன்னியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை குறிக்கும் இலக்காகக் கருதப்பட்டது எனினும் மத்திய அரசின் நடவடிக்கையால் 20 % எத்தனால் கலப்பு இலக்கு முன்கூட்டியே 2025-26 ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் பெட்ரோலுடன் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு 5 மாதங்களுக்கு முன்பே எட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக, காலக்கெடுவை விட முன்னதாகவே இலக்கு எட்டப்பட்டுள்ளது,
இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, ரூ.41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணி சேமிப்பை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.