இந்தியா

புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது- சர்வதேச புத்தமத மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

Published On 2023-04-20 08:21 GMT   |   Update On 2023-04-20 08:21 GMT
  • ஏழைகள் மற்றும் வளங்கள் இல்லாத நாடுகளை பற்றி உலகம் சிந்திக்க வேண்டும்.
  • நவீன பிரச்சினைகளுக்கு புத்த மதத்தில் தீர்வு இருக்கின்றன.

புதுடெல்லி:

மத்திய கலாச்சாரதுறை அமைச்சகமும், சர்வதேச புத்தமத கூட்டமைப்பும் இணைந்து டெல்லியில் 2 நாட்கள் சர்வதேச புத்த மத உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்தன.

"சமகால சவால்களுக்கு பதில்: தத்துவத்தில் இருந்து நடை முறைக்கு" என்பது இந்த மாநாட்டின் கருப் பொருளாகும்.

உலகளாவிய புத்தமதத் தலைமை, புத்த மதம் சார்ந்த வல்லுனர்களை ஒருங்கிணைத்து சர்வதேச நாடுகளுக்கு உகந்த கொள்கைகளை உருவாக்குவதற்கான முயற்சிக்காக இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. புத்தமத கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உதவியுடன் சமகால சவால்களை எதிர்கொள்வது பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

சர்வதேச புத்தமத உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களை பாதித்துள்ளன. மக்கள் தங்கள் நலன்களுடன் நாடு மற்றும் உலக நலனுக்கும் முன்னுரிமை அளிப்பது காலத்தின் தேவையாகிறது. ஏழைகள் மற்றும் வளங்கள் இல்லாத நாடுகளை பற்றி உலகம் சிந்திக்க வேண்டும்.

புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி உள்பட பல நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம். ஒவ்வொரு மனிதனின் வலியையும் சொந்தமாக கருதியது.

புத்தரின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க தொடர்ந்து முயற்சி செய்துள்ளோம். நவீன பிரச்சினைகளுக்கு புத்த மதத்தில் தீர்வு இருக்கின்றன. புத்தரின் போதனைகள் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குகின்றன.

உலகம் போர், பொருளாதார ஸ்திரத்தன்மை, பயங்கரவாதம், மதத்தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சந்தித்து வருவதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு புத்தரின் கருத்துகள் தீர்வை அளிக்கிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளை சேர்ந்த புத்தமத தலைவர்கள், வல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News