உலக பிராண்டுகளுக்கு டஃப் கொடுக்கும் உள்ளூர் தயாரிப்புகள்
- இந்திய மதுபான வர்த்தக சந்தை 33 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடையது
- அம்ருத் விஸ்கி 183 சதவீதம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது
மதுபான வகைகளில் உலகளவில் பெரும்பாலான ஆசிய நாடுகளில் பீர் விரும்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் வைன் சுவைப்பதையே அதிகளவில் மதுப்பிரியர்கள் விரும்புகின்றனர்.
ஆனால், இந்தியர்கள் விஸ்கி பிரியர்கள்.
மதுபான வர்த்தகத்தில் $33 பில்லியன் மதிப்புடைய சந்தையாக அதிக விஸ்கி சுவைப்பவர்கள் நாடாக இருந்த இந்தியா தற்போது அதிகளவில் விஸ்கி தயாரிக்கும் நாடாக உருவெடுத்துள்ளது.
இந்திய தலைநகர் புது டெல்லியை சேர்ந்த பிக்காடிலி வடிசாலையில் (Piccadily distillery) தயாராகும் சிங்கிள் மால்ட் வகை "இண்ட்ரி" (Indri) விஸ்கி, உலகிலேயே சிறந்த விஸ்கி என முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் முன்னணியில் உள்ள பிரான்சின் பெர்னாட் ரிகார்ட் (Pernod Ricard) நிறுவனத்தின் க்ளென்லிவெட் (Glenlivet), இங்கிலாந்தின் டியாஜியோ (Diageo) நிறுவனத்தின் டாலிஸ்கர் (Talisker) ஆகிய மதுபான வகைகள் இந்தியாவின் இண்ட்ரி, அம்ருத் (Amrut) மற்றும் ராம்புர் (Rampur) போன்ற உள்ளூர் விஸ்கி மதுவகைகளுடன் போட்டி போட முடியாமல் திணறுகின்றன.
தங்கள் உபயோகத்திற்கும், கேளிக்கை விருந்து பரிமாற்றங்கள் மற்றும் பிறருக்கு பரிசளிக்கவும் பெரும்பாலான இந்தியர்கள், இந்த உள்ளூர் தயாரிப்புகளையே விரும்ப தொடங்கி உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உலகின் தலைசிறந்த விஸ்கிகளுக்கான பரிசு (Whiskies of the World) போட்டியில், ஸ்காட்லேண்டு மற்றும் அமெரிக்காவின் பல பிராண்டுகளை பின்னுக்கு தள்ளி "பெஸ்ட் இன் ஷோ" (Best in Show) பரிசை இண்ட்ரி (தீபாவளி எடிஷன்) வென்று முதலிடம் பிடித்தது.
விற்பனையில் முன்னணியில் இருந்த க்ளென்லிவெட், இந்திய பிராண்டான அம்ருத் விஸ்கியின் 183 சதவீத வளர்ச்சியால் சரிவை சந்தித்திருக்கிறது.
வரும் 2025 காலகட்டத்தில் பிக்காடிலி நிறுவனம் தனது உற்பத்தியை 66 சதவீதம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் சித்தார்த்த ஷர்மா தெரிவித்தார்.
விற்பனையில் முன்னணியில் உள்ள இந்த மது தயாரிப்பு நிறுவனங்கள் விலையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு பாட்டில் இண்ட்ரி $37, அம்ருத் $42 மற்றும் ராம்புர் $66 என அயல்நாட்டு மதுபானங்களுக்கு ஈடாக விற்பனை ஆகிறது.