இந்தியா

தனது தோலில் செய்யப்பட்ட காலணிகளை தாய்க்கு பரிசாக வழங்கிய ரவுடி

Published On 2024-03-23 06:17 GMT   |   Update On 2024-03-23 06:17 GMT
  • சாந்தி பானி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் தனது இந்த காலணி பரிசை தாய்க்கு வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
  • சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்தவர் ரவுனக் குர்ஜார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ரவுடிகள் பட்டியலில் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவர் தனது சொந்த தோலில் இருந்து செய்யப்பட்ட காலணிகளை தனது தாய்க்கு பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

ரவுனக் குர்ஜார் ஒரு முறை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது தொடைப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில், அதில் தோல் அகற்றப்பட்டது. அந்த தோலை செருப்பு தொழிலாளியிடம் கொடுத்து காலணியாக தைக்குமாறு ரவுனக் குர்ஜார் கூறி உள்ளார். அதன்படி அந்த தொழிலாளி அவரது தோலை காலணியாக வடிவமைத்து கொடுக்க, அதனை அவர் தாய்க்கு பரிசாக வழங்கினார். சாந்தி பானி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் தனது இந்த காலணி பரிசை தாய்க்கு வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.


இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராமாயணத்தை தவறாமல் பாராயணம் செய்வேன். மேலும் ராமரின் கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். தாயாருக்கு தன் தோலினால் செருப்பை செய்தாலும் போதாது என்று ராமரே கூறி உள்ளார். எனவே இந்த யோசனை என் மனதில் தோன்றியது. அதன்படி எனது தோலில் இருந்து காலணிகளை உருவாக்கி என் அம்மாவுக்கு பரிசளிக்க முடிவு செய்தேன். சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.

குர்ஜாரின் தாயார் கூறுகையில், ரவுனக் போன்ற ஒரு மகனை பெற்றதை நான் பாக்கியமாக கருதுகிறேன். கடவுள் அவரை எல்லா கஷ்டங்களில் இருந்தும் பாதுகாத்து எந்த துக்கமும் இல்லாத வாழ்க்கையை அவருக்கு ஆசீர்வதிக்கட்டும் என்றார்.

Tags:    

Similar News